கோவாவில் நடந்த மூத்தோர் மகளிர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போட்டியில் கோவைக்கு வெண்கலம் ஈட்டி தந்த மங்கை

கோவா மூத்தோர் தடகள சங்கமும், இந்திய விளையாட்டு ஆணையமும் இணைந்து, தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியை நடத்தியது. தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற கோவையை சேர்ந்த ஜெயாமகேஷ் (50) மூன்றாம் இடம் பெற்று, வெண்கல பதக்கத்தை வென்றார்.கோவா பாம்போலியன் ஸ்டேடியத்தில் கடந்த ஜூன் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் மூத்தோர் தடகள போட்டிகள் நடந்தது. 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், வட்டெறிதல் (டிஸ்கஸ் த்ரோ) கோவையை சேர்ந்த ஜெயாமகேஷ் பங்கேற்றார். இவர் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கத்தை பெற்றார்.

 

மூத்தோர் தடகள போட்டி வீராங்கனை ஜெயாமகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: எல்லைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அதை கொஞ்சம் தள்ளி வைப்போம் என்பதை நான் உணர்கிறேன். தேட முடியாதவற்றை தேட முடிந்தது. மூத்தோர் தடகள போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று முதல் முதலாக வெண்கல பதக்கம் பெற்றுள்ளேன். இது, இந்த ஆண்டு மலேசியாவில் நடக்கவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதியளித்து, பங்கேற்க வாய்ப்பளித்துள்ளது.

 

எனக்கு பயிற்சி அளித்த கோல்டு கிரஸ்ட் த்ரூ ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் நாராயணனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். ஒரு விளையாட்டு வீரர் வெற்றி பெற, நிறைய பயிற்சிகள், கடுமையான உழைப்பு, ஒழுக்கம் மற்றும் உறுதியும் வேண்டும். என்னை போன்றோருக்கும் இது எளிதானது அல்ல. 50 வயதுக்கும் மேல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவது சவாலானது. எந்த வயதிலும், போட்டியை எதிர்கொண்டு வெற்றி பெறுவது தான் சரியான போட்டி.

 

கோல்டு கிரஸ்ட் த்ரூ ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் நாராயணன் கூறுகையில், ‘‘ டிஸ்கஸ் த்ரோ எனப்படும் வட்டெறிதல் போட்டியில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது.இப்போட்டியில் பங்கேற்க நான், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் திறமையை வெளிப்படுத்தும் பயிற்சியை அளித்து வருகிறேன். இந்த விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும், பல வெற்றியாளர்களை உருவாக்கவும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,’’ என்றார்.


Leave a Reply