பட்ஜட் – பெட்ரோல் , டீசல் விலை ரூ.2.50 வரை உயரும்

மத்திய பட்ஜட்டில் வெளியான அறிவிப்புகளை தொடர்ந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர உள்ளன. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இரண்டு ரூபாய் கூடுதல் வரி என கூறப்பட்டு இருந்தாலும் அவற்றின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் வரை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்டு வரும் சிறப்பு கூடுதல் கலால் வரி மற்றும் சாலை உட்கட்ட அமைப்பு மேம்பாட்டு வரி ஆகியவை தலா 2 ரூபாய் உயர்த்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

 

இதன் மூலம் திரட்டப்படும் நிதி சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். சாலை உள்ளிட்ட உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசலுக்கான வரி உயர்வு தலா 2 ரூபாய் என கூறப்பட்டாலும் இதன் பிறகு மதிப்பு கூட்டு வரியையும் சேர்த்து கணக்கிட வேண்டியுள்ளது.

 

இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் வரையும், டீசல் விலை 2 ரூபாய் 30 காசுகள் வரையும் உயரும் என தெரிகிறது. இது தவிர, தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார். தங்கத்தை இறக்குமதி செய்ய கூடுதல் செலவாகும் என்பதால் தங்க நகைகளின் விலையும் உயர உள்ளது. தங்கத்தின் விலை ஏற்கனவே கடுமையாக அதிகரிக்கப்பட்ட நிலையில் அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Leave a Reply