குனிந்து பதவி வாங்கியது யார்? சட்டப்பேரவையில் சலசலப்பு..!

மானியகோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி குனிந்து பதவி வாங்காத தலைவர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டு தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட துணை முதலமைச்சர் ஓபிி‌எஸ் கோடி முறை குனிந்தே பதவி பெற்றவர் செந்தில் பாலாஜி என கூறினார்.செந்தில் பாலாஜி குனிந்தே பதவி பெற்றதற்கான புகைப்படங்களை இங்கே கொடுத்தால் அவை நிரைந்துவிடும் என்றார்.

 

அப்போது குறுக்கிட்ட மு.க. ஸ்டாலின் தவழ்ந்து செல்லும் படங்கள் தன்னிடம் உள்ளது, அதை கொடுக்கலாமா என கேட்டார். குனிந்து கும்பிடு போட்ட காட்சி வேண்டுமானால் நீங்கள் காட்டலாம். ஆனால், நீங்கள் தவழ்ந்து கும்பிடு போட்ட காட்சியை நான் காட்டவா என்று ஸ்டாலின் கூறியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. கட்சிகளுக்கு மாறி மாறி சென்றுள்ள செந்தில் பாலாஜி இப்போது இருக்கும் கட்சிக்காவது விசுவாசமாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார்.

 

செந்தில் பாலாஜி என்ற பெயரை திமுகவிற்கு சென்றதும் செந்தில் குமார் என்று அவர் மாற்றிகொண்டதாக அமைச்சர் தங்கமணி கூறினார். அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜி பெயரை மாற்றிகொண்டது தனது தனிப்பட்ட முடிவு என விளக்கம் அளித்தார். செந்தில் பாலாஜி பேசும் போது அவர் சார்ந்த கட்சியையும், கட்சி தலைமையையும் புகழ்ந்து பேசுவதில் தவறில்லை என கூறிய முதலமைச்சர், ஆனால் அவர் பேசும் போது குனிந்து என கூறியதால் தாங்கள் பதில் கூற வேண்டிய நிலை வந்தது என்றார்.

 

செந்தில் பாலாஜி அதிமுக அமைச்சராக இருந்த போது அப்போதைய திமுக தலைவர் கலைஞரை விமர்சித்த வார்த்தைகளை அமைச்சர் உதயகுமார் அவையில் குறிப்பிட்டதால் மீண்டும் அவையில் அமளி உருவானது. அதிமுகவில் இருந்து திமுகவை விமர்சித்த பாவத்தை கழுவுவதற்காகத்தான் அவர் திமுகவிற்கு வந்து இருக்கிறார் என்று துறைமுருகன் அப்போது கூறினார். அப்போது முதலமைச்சர் மீண்டும் தயவு செய்து அதிமுகவிற்கு வந்துவிட வேண்டாம் என்றும் முதலமைச்சர் கூறினார்.


Leave a Reply