பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது.
இந்நிலையில், வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவோர், வேட்பு மனுக்களை ஜூலை 11-ம் தேதி முதல், 18-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். ஜூலை 19-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 22ம் தேதி கடைசி நாள் ஆகும்.
அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஆகஸ்ட் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபாட் எந்திரங்களும் பயன்படுத்தப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.