வசதியான மாணவர்களின் வீடுகளை குறி வைத்து கொள்ளை அடித்த பள்ளி ஆசிரியர்

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தம்மிடம் படிக்கும் வசதி படைத்த மாணவர்களின் குடும்பங்களிலே அவர் கைவரிசை காட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மேல்அனுப்பானடி, சண்முக குடியிருப்பை சேர்ந்தவர் தொழிலதிபர் வெற்றிவேல். மனைவி, மகன், மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார்.

 

கடந்த மாதம் 27 ஆம் தேதி மகன் வேலைக்கு சென்று இருந்த நிலையில் வெற்றிவேல் மற்றும் மனைவி , மருமகளும் வீட்டில் இருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கொரியர் வந்து இருப்பதாக வெற்றிவேலிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி வெற்றிவேல் கதவை திறந்துள்ளார். அப்போது உள்ளே நுழைந்த இருவரும் வெற்றிவேல், அவரது மனைவி மற்றும் மருமகளை தாக்கி கை கால்களை கட்டிப்போட்டு உள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 48 சவரன் நகைகள் ,32 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து கொண்டு தப்பி சென்றனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சி‌சி‌டி‌வி கேமராக்களை கைபற்றி ஆய்வு செய்தனர். அதில் போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வீட்டிற்கு வருவதும், பின்னர் வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து செல்வதும் அந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட தினேஷ் குமார், ஜஸ்டின், நிர்மல் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

 

அவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் பணத்தையும் 46 சவரன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொள்ளை சம்பவத்திற்கு முதன்மையாக இருந்தது தெரிய வந்தது. மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக வீரக்குமார் பணியாற்றி வருகிறார். கொள்ளை நடந்த வெற்றிவேல் குடும்பத்திடம் வீரக்குமார் நண்பராக பழகி வந்துள்ளார். அவரது வீட்டில் நகை, பணம் இருப்பதை தெரிந்து கொண்ட வீரக்குமார் தனது நண்பர்களான தினேஷ்,ஜஸ்டின், நிர்மல் ஆகியோரின் உதவியுடன் அவற்றை கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார்.

 

மேலும் வீரக்குமார் பணியாற்றும் தனியார் பள்ளியில் வசதி படைத்த மாணவர்களை நோட்டமிட்டு அவர்களது வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் நட்பை ஏற்படுத்தி கொண்டு பழகி வந்துள்ளார். பின்னர் தனது நண்பர்களின் உதவியுடன் திட்டம் தீட்டி கொள்ளை அடித்துள்ளார். வீரக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply