கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபேக் நாடுகள் முடிவு

கச்சா எண்ணெய் உற்பத்தியை அடுத்த 9 மாதங்கள் குறைப்பது என்று எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது. ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அல்ஜேரியா, அங்கோலா, ஈகுவடார், கினியா, கபான், ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், காங்கோ, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா ஆகிய 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், மெக்ஸிகோ, நார்வே, ஓமன், ரஷியா, எகிப்து ஆகிய பார்வையாளர் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

 

இந்த கூட்டத்தில் அடுத்து வரும் 9 மாதங்களுக்கு அதாவது, இந்த ஆண்டு இறுதி வரை எண்ணெய் உற்பத்தியை குறைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து இருக்கும் நிலையில் ஒபேக் நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால் விலை வீழ்ச்சி ஏற்படும் என்றும், இதனால் உற்பத்தியை குறைப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நைஜீரிய நாட்டு பிரதிநிதி தெரிவித்தார்.

 

கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 12.16 மில்லியன் பேரல்களாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளதை அவர் சுட்டி காட்டியுள்ளார். சர்வதேச சந்தையில் 44விழுக்காடு அளவிற்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை கொண்டுள்ள ஒபேக் நாடுகள் இதே கால கட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1,08,32,318 பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது.

 

தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 66.41 டாலர்களாக உள்ள நிலையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வந்தால் பேரல் ஒன்றின் விலை 30 டாலராக குறையும் என்றும், இதனால் தங்கள் பொருளாதாரம் வீழும் என்பதால் உற்பத்தியை குறைப்பதாகவும் , எந்த அளவு குறைப்பது என்பது குறித்து செவ்வாய் கிழமை முடிவு எடுக்க உள்ளதாகவும் ஒபேக் நாடுகள் தெரிவித்து உள்ளன.


Leave a Reply