வாட்ஸ் – ஆப் மூலம் இனி பணத்தையும் பரிமாறலாம்

வாட்ஸ் – ஆப் மூலம் போட்டோ, வீடியோ, ஆடியோவை பகிர்ந்த மக்கள் இனி பணத்தையும் பரிமாற உள்ளனர். அதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது வாட்ஸ் – ஆப் நிறுவனம். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக யு‌பி‌ஏ எனப்படும் ஒன்று பட்ட பணபரிமாற்றத்திற்கான வசதியை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு.

 

இதன் மூலம் வங்கிகளின் தனிப்பட்ட ஆப்-கள் மட்டும் இல்லாமல் கூகிள் பே, ஃபோன் பே, பேடி‌எம் ஆகிய மொபைல் ஆப் கள் மூலமும் பணபரிவர்த்தனை நடந்து வருகிறது. இவ்வாறான பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாட்ஸ் – ஆப் செயலியும் இந்த ஓட்டத்தில் கால் பதிக்க உள்ளது. கடந்த ஆண்டே வாட்ஸ் – ஆப் நிறுவனம் பண பரிமாற்ற வசதியை சோதனை முயற்சியாக கொண்டு வந்த பொழுது இந்தியாவில் வாட்ஸ் – ஆப்புக்கான தகவல் சேமிக்கும் வசதி இல்லை என்பதை சுட்டி காட்டி மத்திய அரசு அனுமதி மறுத்தது.

 

இதனையடுத்து தற்போது தகவல் சேமிப்பு மையத்தை இந்தியாவில் அமைத்துவிட்டு ஒப்புதலுக்காக வாட்ஸ் – ஆப் நிறுவனம் காத்திருக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கிடைத்த உடன் வாட்ஸ் – ஆப் மூலம் பணப்பரிமாற்ற சேவையை தொடங்க வங்கிகளுடன் ஒப்பந்தம் போட திட்டமிட்டுள்ளதாக வாட்ஸ் – ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

டிஜிட்டல் இந்தியாவில் ஒன்றுபட்ட பணபரிவர்த்தனை வசதி மூலம் 2019 மே மாதத்தில் மட்டும் 143 வங்கிகளில் 73 கோடி முறை பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. மொத்தம் 1.53 லட்சம் கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ள இந்த பணப்பரிவர்த்தனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பணபரிவர்த்தனையை விட இந்த ஆண்டு 287 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

 

2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் 18.9 கோடி பணப்பரிவர்த்தனை மூலம் 33 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பரிவர்த்தனை செய்யபட்டுள்ளது. அதே போல் 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் 91 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணப்பரிமாற்றம் மட்டுமே நடைபெற்றுள்ளது. இந்த வளர்ச்சிக்கு வங்கி ஆப்-களை தாண்டி கூகிள் பே, ஃபோன் பே, பேடி‌எம் ஆகிய மொபைல் ஆப் கள் பல்வேறு சலுகைகளை வழங்குவதே காரணமாக முன் வைக்கப்படுகிறது.

 

வெவ்வேறு வங்கி கணக்குகளுடன் உடனுக்குடன் பணபரிமாற்றம் பயனாளியின் வங்கி விவரம் செலுத்த வேண்டிய தேவையில்லை வருடம் 365 நாட்களில் எந்நேரம் வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும் என்பது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து இருப்பதும் , இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


Leave a Reply