சீன பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிப்பதில்லை என முடிவு

Publish by: --- Photo :


வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்காவும் , சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளனர். சீன பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிப்பதில்லை எனவும் பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதிகளின் மீதான வரி விதிப்பை அதிகப்படுத்தி வர்த்தக போரில் இறங்கினர்.

 

நடுவில் வர்த்த்க போரை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு இரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். பெய்ஜிங் மற்றும் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இந்த தொடர் பேச்சுவார்த்தை முடிவு ஏதும் எட்டப்படாமல் கடந்த மாதம் தோல்வியில் முடிவடைந்தது. இந்த பேச்சு வார்த்தை தோல்விக்கு பிறகு அமெரிக்காவும் சீனாவும் மீண்டும் வர்த்தக போரை தீவிரப்படுத்தின.

 

சீனாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஹுவாவேயை முடக்கும் நடவடிக்கைகளிலும் அமெரிக்கா ஈடுபட்டதோடு 5 ஜி தொழில்நுட்பங்களில் ஹூவாவே நிறுவனத்தை விலக்கி வைக்குமாறு நட்பு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே டிரம்பும் , பிங்கும் ஒசாகவில் சந்தித்து பேசினர்.

 

இந்த சந்திப்பின் போது மோதல் போக்கை கையாள்வதை விட பேச்சு வார்த்தையும், ஒத்துழைப்பும் சிறந்தது என்று சீன அதிபர் கூறியுள்ளார். சீனாவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் எட்டபட்டால் அது வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்று டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். சுமார் 80 நிமிடங்களுக்கு இந்த பேச்சு வார்த்தை நீடித்தது. சீன அதிபர் உடனான பேச்சு வார்த்தை மிக சிறப்பாகவும் , நன்றாகவும் அமைந்ததாக டிரம்ப் பின்னர் தெரிவித்தார். மீண்டும் சரியான தடத்திற்கு 2 நாடுகளும் திரும்பி உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

 

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தங்கள் நாட்டு ஏற்றுமதி மீது அமெரிக்கா புதிய விதிகளை விதிக்காது என்றும் இரு தரப்பு குழுக்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களை அமெரிக்கா நியாயமாக நடத்தும் என நம்புவதாக டிரம்பிடம் பிங் கூறியுள்ளார்.


Leave a Reply