என்ன டெக்னாலஜி வந்து என்ன பிரயோஜனம்!வெண்பன்றி வளர்ப்பு கூடத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது பரிதாபம்

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த வெண் பன்றி வளர்ப்புக்கூடத்தில் கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சரவணம்பட்டியை அடுத்துள்ள கீரணத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுப்பிரமணியம்(எ)ரவி என்பவருக்கு சொந்தமாக வெண்பன்றி வளர்ப்பு கூடம் கடந்த இரு ஆண்டுகளாக அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்துள்ளது.இதில் வெளியேறும் கழிவுகள் அருகில் 10 அடி ஆழமுள்ள தொட்டியில் விடுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கோவை இடையர்பாளையம் கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த ராஜப்பன்,வேடியப்பன் மற்றும் அவரது உறவினர் வேடியப்பன் ஆகிய மூன்று பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.மூவரும் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர்கள். தொட்டியை சுத்தம் செய்வதற்காக முதலில் ராஜப்பன் உள்ளே இறங்கியுள்ளார். உள்ளே இறங்கியதும் ராஜப்பன் மயக்கமுற்ற நிலையில் அவரை காப்பாற்ற வேடியப்பன் இருவரும் உள்ளே இறங்கியுள்ளனர்.

இதில் மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னூர் தாசில்தார் வசந்தாமணி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் அப்பகுதி மக்களிடையே தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அன்னூர் தாசில்தார் கூறுகையில் இந்த வெண்பன்றி வளர்ப்பு கூடமானது அனுமதியின்றி செயல்பட்டு வந்துள்ளது.கூடத்தின் உள்ளே பன்றிகள் இருப்பதால் கால்நடை பராமரிப்புத்துறையினரின் உதவியுடன் அவற்றை மீட்ட பிறகு கூடத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் பேசுகையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பன்றி கூடத்தின் உண்மையான ஆவணங்கள் கிடைத்தவுடன் உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

என்ன டெக்னாலஜி வந்து என்ன பிரயோஜனம்..போனது 3 உயிர் தானே என்று அலட்சியமாக இருந்து விடாமல் இனிமேலும் இது போன்ற உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.அனுமதியின்றி செயல்பட்டு வந்த வெண் பன்றி வளர்ப்பு கூடத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.