15 வது நிதிக்குழு ஆணையம் புறக்கணிக்கப்படுகிறதா தென்னிந்தியா?

15 வது நிதிக்குழு ஆணையத்தில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் ஒருவர் கூட இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நிதி சார்ந்த உறவுகளை நிர்ணயிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் நிதி குழு ஆணையம். எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு இருந்தாலும், எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை.

 

ஒவ்வொரு மாநிலத்தின் நிலப்பரப்பளவு, மக்கள் தொகை, தனி நபர் வருமான வித்தியாசம், வனங்களின் வளம் போன்றவற்றிற்கு ஏற்ப நிதி அதிகமாவும், குறைவாகவும் அந்தந்த மாநிலங்களுக்கு இடையே பிரித்து கொடுக்கப்படும். இந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து நடுநிலையோடு மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதே நிதிக்குழு ஆணையத்தின் முக்கிய கடமை. ஆனால் 2020 ஆம் ஆண்டிலிருந்து தன் பணியை தொடங்க உள்ள 15 வது நிதிக்குழு ஆணையத்தின் நடுநிலைத் தன்மை மீது தற்போது சந்தேகம் எழுந்து உள்ளது.

 

காரணம் 15 வது நிதிக்குழு ஆணையத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை. இதனை சுட்டி காட்டிய கர்நாடக அமைச்சர், தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்ததோடு, மேலும் திறமையானவர்கள் யாரும் தென்னிந்தியாவில் இல்லையா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.இதே போல 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை புள்ளி விவரங்களின் அடிப்படையில் மாநிலங்களூக்கு நிதி பகிர்ந்து அளிக்கப்படும் என்று புதிய கமிஷன் விதிமுறையை வகுத்து இருக்கிறது.

 

இதனால் மக்கள் தொகையை கட்டுபடுத்தும் திட்டத்தில் வெற்றி கண்ட தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு தேவையான நிதி கிடைப்பதில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.ஏற்கனவே ஜி‌எஸ்‌டியால் மாநிலங்களின் நிதி உரிமை கட்டுபடுத்தப்பட்ட நிலையில் நிதி கமிஷனின் விதி முறைகளால் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் போகும் என்று தன் வாதத்திற்கு மேலும் வழு சேர்ந்து இருக்கிறார்.

 

ஏற்கனவே இந்த பிரச்சனை குறித்து 2018 ஆம் ஆண்டே கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில நிதி அமைச்சர்கள் ஒன்று கூடி விவாதித்தனர். அதில் தற்போது நடைமுறையில் இருக்கும் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்ததோடு மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநிலங்களுக்கு எந்த வகையிலும் நிதி ஆதாரம் மறுக்கப்பட கூடாது என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

 

நிதி குழுவின் புதிய முடிவால் தமிழகமும் கடுமையாக பாதிக்கப்படும் என்றாலும் தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தம்ழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவியதால் தமிழகத்தின் நலன்புறக்கணிக்கப்படும் என்ற பேச்சு எழுந்தது. இந்த நிலையில் நிதி பரிந்துரைக்கும் குழுவில் கூட தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது எதேச்சையான ஒன்றா அல்லது திட்டமிட்டதா? என்ற கேள்வி எழுகிறது.


Leave a Reply