மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு.தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.இளம்பெண் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடைப்பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 22).சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷினி ப்ரியா (வயது 17).இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.இருவரும் கடந்த பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கனகராஜுவும்,வர்ஷினி ப்ரியாவும் சாதி மறுப்பு திருமணம் செய்து கனகராஜின் வீட்டில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார் கனகராஜின் அண்ணன் வினோத் குமார் (வயது 24).

 

இந்த நிலையில் இன்று வாய்த்தகராறு ஏற்பட்டு கடைசியில் மோதல் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த வினோத் குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜ் – வர்ஷினி ப்ரியா ஜோடியை வெட்டியுள்ளார். இதில் கனகராஜ் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.வர்ஷினி ப்ரியா படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வினோத் குமார் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார்.

பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனகராஜின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேரத்தனர். மேலும்,பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வர்ஷினி ப்ரியாவை மீட்ட காவல் துறையினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய வினோத் குமாரை தேடி வருகின்றனர்.சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி அரிவாளால் வெட்டப்பட்டு காதலன் கொலை செய்யப்பட்டும்,காதலி வர்ஷினி ப்ரியா பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,அரிவாள் வெட்டால் பலத்த காயமடைந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வர்ஷினி ப்ரியா தலித் என்பதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விசாரணை மேற்கொண்டார்.

 

மேலும்,சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி மீது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில் சங்கர் நகர்,ஸ்ரீரங்கராயன் ஓடை உள்ளிட்ட மேட்டுப்பாளையத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Leave a Reply