மத்திய அரசின் புதிய வரைவுக் கல்வி கொள்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மும்மொழி கொள்கை, கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு உள்ளிட்ட திருத்தங்களுடன் புதிய வரைவுக் கல்வி கொள்கையை மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மத்திய அரசின் இக்கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு புதிய வரைவுக் கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்வதாகவும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர். கல்வியில் முன்னோடியாக இருக்கும் தமிழகம், மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கையால் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

 

மத்திய அரசின் இந்த முயற்சியை கண்டித்து , வரைவுக் கல்வி கொள்கை நகலை மாணவர்கள் எரிக்க முற்பட்டனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தினர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது.


Leave a Reply