கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வங்கியை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி முத்து கவுண்டனூர் பகுதியில் ஆந்திரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியானது கருமத்தம்பட்டியிலிருந்து அன்னூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த வங்கியை ஒட்டியே ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது.
நேற்று விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் வங்கியைப் பூட்டிச் சென்ற வங்கி மேலாளர் சந்தோஷ்குமார் இன்று காலை வழக்கம் போல் வங்கியைத் திறந்து பார்த்தபோது வங்கியின் பின்புறம் உள்ள ஒரு அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதும், அதன் வழியாக கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைய முயன்றதும் தெரியவந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொள்ளை முயற்சி சம்பவம் நேற்றைய தினம் அல்லது நேற்று முன்தினம் இரவு நடந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் வங்கியின் ஸ்ட்ராங் ரூமிற்கு பக்கத்து அறைக்குள் புகுந்துள்ளனர்.
அந்த அறை அலாரம் அடிக்கும் வகையில் வசதிகள் செய்யப்படாத அறையாகும்.அந்த அறைக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வங்கியின் பிரதான ஸ்ட்ராங் ரூமை நவீன இயந்திரங்களைக் கொண்டு துளையிட்டுள்ளனர். வங்கியின் சுவர் மிகவும் உறுதியாக இருந்ததால் அதை துளையிட முடியாமல் திணறிய கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியைக் கைவிட்டுவிட்டு் அந்த அறையில் இருந்த சிசிடிவி கேமராவின் சர்வரை உடைத்து அதிலிருந்த ஹார்ட்டிஸ்க்கை எடுத்துச் சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்தது வங்கி மேலாளர் சந்தோஷ் குமார் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியுள்ள கைரேகைகளை பரிசோதித்து வருகின்றனர்.பிரதான சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வங்கியில் நடந்துள்ள இந்த கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வங்கியில் இரவு நேர காவலாளி பணியில் அமர்த்தப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.