திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளை முயற்சியை தடுத்ததால் டாஸ்மாக் காவலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மதுபானக் கடையில் நந்திராஜ் என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். மாதத்திற்கு 3000 சம்பளம் பெறும் அவர், நேற்று இரவு வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு விழித்த நந்திராஜ் கொள்ளையர்களை தடுத்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் காவலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். தகவல் அறிந்த போலீசார் காவலாளி நந்திராஜ் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொள்ளை முயற்சியை தடுத்து உயிரை விட்ட காவலாளியால் மதுபான கடையில் இருந்த 2 அரை லட்ச ரூபாய் தப்பியது.