பழைய குற்ற வழக்குகள் தொடர்பாக காவல் துறையினர் தன்னை தொந்தரவு செய்வதாக கூறி குற்றாவாளி ஒருவர் அசோக் நகர் காவல் நிலையம் முன்பாக பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நெசப்பாக்கம்,எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கார்த்திக் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவரை காவல் துறையினர் அடிக்கடி அழைத்து தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார்.
காவல் துறையினரின் நடவடிக்கையை மனைவியிடம் கூறியதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திக்கின் மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த கார்த்திக் குடிபோதையில் அசோக் நகர் காவல் நிலையம் முன்பாக தன்னையும், தனது மனைவியையும் காவல் துறையினர் பிரிப்பதாக கூறி பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். உடனே அங்கிருந்த காவல் துறையினர் கார்த்திக்கை மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.