நெகிழியை உற்பத்தி செய்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம்! திங்கள் முதல் அமல்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, தடை செய்யபட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் முதல் முறை பிடிபடும் போது 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

 

அடுத்தடுத்து பிடிபடும் போது அபராதத்தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும். தடை செய்யபட்ட நெகிழி பொருட்களை சேமித்து வைத்தாலோ , வழங்கினாலோ, எடுத்து சென்றாலோ முதல் முறை 1 லட்சம் ரூபாயும் , மீண்டும் பிடிபட்டால் 2 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். நெகிழி பொருட்களை விற்பனை, விநியோகம் செய்தால் முதல் முறை பிடிபடும் போது 50,000 ரூபாயும், அத்தகைய செயல் தொடர்ந்தால் அபராதம் 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும்.

 

தடை செய்யபட்ட நெகிழி பொருட்களை வணிக ரீதியில் பயன்படுத்துவோருக்கு முதன் முறை 25,000 ரூபாயும், மீண்டும் பிடிபட்டால் 50,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.இதே போல தடை செய்யப்பட்டுள்ள நெகிழி பொருட்களை வீடுகளில் பயன்படுத்தினாலும் அபராதம் வசூலிக்கப்படும்.

 

பிடிபடுவது முதன் முறையாக இருந்தால் 500 ரூபாயும், மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டால் 1000 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தடை உத்தரவு அமலுக்கு வந்த நாளான கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இருந்து இதுவரை 250 டன் அளவிற்கு தடை செய்யபட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் திங்கள் கிழமை முதல் அபராதம் வசூலிக்கும் முறை அமலுக்கு வருகிறது.


Leave a Reply