தமிழகம் மற்றும் கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டம் ? ISIS இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக கோவையில் ஒருவர் கைது

தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை கோவையில் சோதனை நடத்தியது. உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், சுண்ணாம்பு கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 7 பேரின் வீடுகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டது.அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் 300 ஏர் கன் துப்பாக்கிகள்,29 சிம் கார்டுகள்,14 செல்போன்கள்,10 பென் டிரைவ்கள்,6 மெமரி கார்டு,3 லேப்-டாப்கள்,4 ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

மேலும், விசாரணையில் இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவருக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகம்மது அசாருதீன் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய ஸக்ரான் ஹசீனுடன் தொடர்பில் இருந்துள்ளார் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

 

முகம்மது அசாருதீன் சமூக வலைதளங்களின் மூலம் ISIS அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முகம்மது அசாருதீன்,அகரம் சிந்தா,ஷேக்இதயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், இப்ராஹீம் உள்ளிட்ட 6 பேருக்கும் ISIS அமைப்புடன் தொடர்பு இருப்பதாககூறப்படுகிறது. அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இது சம்பந்தமாக முகம்மது அசாருதீன் என்பவரை கைது செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அவரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவையில் கைது செய்யப்பட்ட முகம்மது அசாருதீன் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்,என தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது தேர்தல் பறக்கும் படையினரின் வாகனசோதனையில் 3 ஏர் கன் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.அப்போதே கோவை காவல் துறையினர் உஷாராகி சோதனையை தீவிரப்படுத்தி இருக்க வேண்டும்.இந்த விஷயத்தை மத்திய உளவுத்துறைக்கு கொடுத்திருந்தால் தற்போது கைது செய்யப்பட்டது போல பலர் சிக்கியிருப்பர் என்பது கூடுதல் தகவல்.

 

இந்த நிலையில் கோவையின் 3 இடங்களில் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்பு நகர் பகுதியில் ஷாஜகான், கரும்புக்கடை பகுதியில் ஷபியுல்லா வின்சென்ட் ரோடு பகுதியில் உள்ள முகமது உசேன் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனையிட்டு வருகின்றனர்.கைது செய்யப்பட்ட முகம்மது அசாருதீன் ISIS இயக்கத்தின் தென் இந்திய தளபதியாக செயல்பட்டவன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Leave a Reply