கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் அமைத்து மின் பாதை அமைப்பதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட் எனும் மத்திய அரசு நிறுவனம் திட்டமிட்டு மின் கோபுரம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த உயர் மின் பாதை தங்களது விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும்,விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும்,உயர் மின் பாதையை கோபுரங்கள் அமைப்பு அமைத்து கொண்டு செல்வதைத் தவிர்த்து புதை வடத்தடத்தின் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் அரசு செவிமடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் சூலூர் தாலுகா கருமத்தம்பட்டி செம்மாண்டம் பாளையம், எலச்சிபாளையம் போன்ற பகுதிகளில் பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் அதிரடியாக அத்துமீறி நுழைந்து நில அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடனும், அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து பவர் கிரிட் நிறுவனத்தினர் நில அளவை தெடர்ந்து நடத்தினர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என 6 பேர் திடீரென உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி போரட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் மின் கோபுரத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டனர்.தொடர்ந்து 6 மணி நேரமாக போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பாதுகாப்பிற்காக தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றது.
இதே போல் கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் அருகே உயர்மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 12 க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான சோமனூர்,செம்மாண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தன்னை வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றுள்ளார்.நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் குறித்து எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமிக்கு அரசல் புரசலாக போராட்டம் குறித்து தகவல் தெரிய வந்ததும் போராட்டக்களத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் கூட ஈடுபடாமல் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை உடனடியாக முடித்துக்கொண்டு வேறு பகுதிக்கு சென்றுள்ளார்.
தங்கள் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி. எனவே,உயர்மின் கோபுரம் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லாமல் தரைவழியே அதாவது புதை வடமாக கொண்டு செல்ல வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தோம்.அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை.இந்த நிலையில் எங்கள் பகுதியில் இடைத்தேர்தல் வந்தது.அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கனகராஜின் தம்பி வி.பி.கந்தசாமி போட்டியிட்டார்.அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தோம்.
அப்படியிருந்தும் கூட இப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த எம்.எல்.ஏ கந்தசாமி தங்களை வந்து சந்திக்கவில்லை.இவரை நம்பித்தான ஓட்டு போட்டோம்.இப்போவே இப்படின்னா…மக்களுக்கு என்ன நல்லது செய்யப்போகிறார் என நம் காது படவே பொதுமக்கள் பேசினர்.