விசா காலம் முடிந்து தங்கியதுடன் வழிப்பறியிலும் ஈடுபட்ட சூடான் வாலிபர் கைது!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை மாவட்டம் சூலூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சூடான் வாலிபரைப் பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.சூலூர் எஸ்.எல்.வி. நகரில் கடந்த 5 ம் தேதி தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்ததாக அப்பகுதி பொதுமக்கள் சூடான் வாலிபரை பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

அதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் சூடான் நாட்டைச் சேர்ந்த நொயாலி என்ற ஊரைச் சேர்ந்த இஷா என்பவரது மகன் முகமது இஷா வயது 23 எனவும்,இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சூலூரில் உள்ள ஒரு தனியார் கலைக் கல்லூரியில் படிப்பதற்காக 5 ஆண்டு விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

அதன்படி அவரது விசா 2017 ம் ஆண்டே காலாவதியாகிவிட்டது.ஆனாலும் அவர் தொடர்ந்து 2018ம் ஆண்டு வரை அந்த கல்லூரியில் விசா இல்லாமல் கல்வி பயின்று வந்துள்ளார்.ஆனால் இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் காவல் துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில் இவர் விசா இல்லாமலேயே 2018 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து வெளியேறியுள்ளார்.கல்லூரி படிப்பு முடிந்தும் இவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பாமல் சூலூரிலேயே தங்கியிருந்துள்ளார்.

 

சூலூர் காங்கேயம் பாளையம் பகுதியில் உள்ள மணிக்கவுண்டர் என்பவரது தோட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கியிருந்து வரும் நிலையில் கடந்த 5 ம் தேதி தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்த சம்பவத்தில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.வழிப்பறியில் ஈடுபட்ட முகம்மது இசா விடம் விசாரித்தபோது தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசா இல்லாமல் இங்கு தங்கியிருந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

 

அதைத் தொடர்ந்து விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்ததுடன் வழிப்பறியிலும் ஈடுபட்டதாக கூறி முகம்மதுஇஷாவை சூலூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இதுபோன்று வேறு எவரேனும் விசா இல்லாமல் தங்கி உள்ளனரா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply