சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் விளையாட்டாக நிகழ்த்திய இருசக்கர வாகன பந்தையம் உயிரை பறித்திருக்கிறது. மெரினா கடற்கரை சாலை, அண்ணாசாலை,கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய சாலைகளில் காவல்துறையினரின் தடையை மீறி இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.
ஆபத்து என்று தெரிந்து இருந்தும் இளைஞர்கள் இத்தகைய சாகசங்களில் ஈடுபடுகின்றனர். அப்படி நடந்த வாகன சாகசம் ஓர் இளைஞரின் உயிரை பறித்துள்ளது. சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த 19 வயதான சாந்தகுமார் நேற்று காலை நண்பர்களுடன் பெசன் நகர் கடற்கரையை நோக்கி சென்றுள்ளார்.பாலாஜி என்பவர் இரு சக்கர வாகனத்தை ஓட்ட சாந்தகுமார் பின்னால் அமர்ந்து இருந்தார்.
அவர்களுடன் 3 இரு சக்கர வாகனங்களில் 6 பேர் சென்றுள்ளனர். மெரினா கடற்கரை சாலையில் அவர்கள் அதி வேகத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது பாலாஜி ஒட்டி சென்ற இரு சக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த மாநகர பேருந்தின் மீது மோதியது.இதில் பின்னால் அமர்ந்து இருந்த சாந்தகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனிடயே விபத்தில் சம்பந்தப்பட்ட மாநகர பேருந்து ஓட்டுனரை கைது செய்யவில்லை என சாந்த குமாரின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.சனி கிழமை இரவு முதல் ஞாயிற்று கிழமை அதிகாலை வரை மெரினா கடற்கரை சாலை ,அபிராம புரம், கோட்டூர் புரம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பைக் ரேஸில் ஈடுபடாமல் சமூக பொறுப்புடன் இளைஞர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரின் அறிவுறுத்தலாக இருக்கிறது.