தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை 716 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதில் 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பெண் எம்பிக்களில் மிக இளம் வயது எம்பி என்ற பெருமையை பெற்றுள்ளார் சந்திராணி முர்மு. ஒடிசாவின் கியோஞ்சர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்திராணி பிடெக் பட்டதாரி. படிப்பை முடித்ததும் அரசு வேலைக்காக தன்னை தயார் படுத்தி தேர்வுக்காக படித்து வந்துள்ளார். சந்திராணியின் தந்தை சமூக சேவையில் ஆர்வம் உடையவர். சிறு வயது முதலே தந்தை பார்த்து தானும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் உறவினரின் அறிவுறுத்தலின் பேரின் பிஜு ஜனதா தளம் சார்பில் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டார் சந்திராணி. அவரை எதிர்த்து நின்றவர் பாஜகவின் ஆனந்த நயாக். இருமுறை எம்பியாக பதவிவகித்த ஆனந்த நயாக்குக்கு சந்திராணி முர்மு கடுமையான போட்டியை கொடுத்தார். இறுதியில் 66203 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திராணி வெற்றி பெற்றார். இதன் மூலம் மிக இளம் வயதிலேயே நாடாளுமன்றத்துக்கு செல்லும் பெண் எம்பி என்ற பெருமையை சந்திராணி பெற்றுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திராணி, ”வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளுக்கும் சில தினங்களுக்கு முன்பு தான் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். அதனால் கியோஞ்சர் பகுதியின் எல்லா பகுதிகளுக்கும் செல்ல எனக்கு நேரம் கிடைக்கவில்லை.
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் மக்கள் பிரதிநிதியாக நான் சந்திக்க போகும் சவால்கள் என்ன என்பது கூட எனக்கு அந்த நேரத்தில் தெரியவில்லை. கியோஞ்சர் பகுதியின் மூலை முடுக்கெல்லாம் சென்றுமக்களைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். அது தான் என் முதல் வேலை” என்று தெரிவித்துள்ளார்.