ஆந்திரமாநிலத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆந்திர மாநிலக் காவல்துறையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர் கொரண்டலா மாதவ். இவர் தற்போது, அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்த்பூர் தொகுதி எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாதவ், சிட்டிங் எம்.பியான தெலுங்கு தேசம் கட்சியின் கிறிஸ்டப்பா நிம்மலாவைவிட 1,40,748 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றிருக்கிறார். போலீஸார் சிலர் நின்றிருக்க, டி.எஸ்.பி மஹபூப் பாஷாவுக்கு அவர் சல்யூட் அடிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படம் வைரலான நிலையில், எம்.பி ஒருவர் போலீஸ் அதிகாரிக்கு சல்யூட் அடிக்கலாமா போன்ற புரோட்டோக்கால் விஷயங்கள் குறித்து நெட்டிசன்கள் விவாதித்து வந்தனர். அதற்கு விளக்கமளித்துள்ள மாதவ், வாக்கு எண்ணிக்கையின்போது தனது முன்னாள் உயர் அதிகாரியான பாஷாவைப் பார்த்ததாகவும், அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக சல்யூட் அடித்ததாகவும் கூறியிருக்கிறார்.
மேலும், அவருக்கு தான் முதலில் மரியாதை செலுத்தியதாகவும் பின்னர் பதிலுக்கு வணக்கம் வைத்ததாகவும் கூறியிருக்கும் மாதவ், `தனிப்பட்ட முறையில் அவரது குணநலன்கள் என்னை ஈர்ப்பவை. பரஸ்பரம் மரியாதை செய்யவே சல்யூட் அடித்தேன்’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.