பவானி ஆற்றில் மூழ்கி 3 போ் பலி: போலீஸ் விசாரணை

சிறுமுகை அருகே பவானி ஆற்றில் தத் தளித்தவரை காப்பாற்ற முயன்றபோது, தந்தை, மகள் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கருவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 45) விவசாயி. இவர் சிறுமுகை அருகே பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஒரம்பகாடு என்னும் இடத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பவானிசாகர் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது.இதனால் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்து விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

 

தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறையத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் விவசாயம் செய்வதற்காக முருகேசன் தனது மனைவி வசந்தாமணி, மகள்கள் கெளரி (வயது 22) பிரபா (வயது 16),முருகேசனின் அண்ணன் மகன் பிரதீப் (18) மற்றும் உறவினர்கள் சேகர் (21) உள்பட 7 பேர் தனது வீட்டில் இருந்து காலை புறப்பட்டு பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதிக்கு வந்தனர்.

பின்னர்,அவர்கள் விவசாய விளை நிலத்தை சுத்தம் செய்து விட்டு, அனைவரும் அங்கேயே உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். இந்த நிலையில் மாலை சுமார் 4 மணிக்கு பிரபா பவானி ஆற்றில் குளிக்கச்சென்றார். அப்போது,அவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்ததை கண்ட அவருடைய தந்தை முருகேசன், அக்காள் கவுரி, உறவினர் பிரதீப் ஆகியோர் ஆற்றில் இறங்கி காப்பாற்ற முயன்றனர். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து பிரபாவை மீட்டனர். ஆனால், காப்பற்ற சென்ற 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைக்கண்ட கரையில் இருந்த உறவினர்கள் காப்பாற்றக்கோரி சத்தம் போட்டுள்ளனர். ஆனால்,அதற்குள் அவர்கள் 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை காவல் ஆய்வாளர் இளங்கோ, உதவி காவல் ஆய்வாளர் ராஜபிரபு, தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் ராஜ் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய 3 பேரின் உடலை தேடினார்கள். சுமார் ஒரு மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு முருகேசன், பிரதீப் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாலை நீண்ட நேரம் ஆனதால் கெளரியின் உடலை தேடும்பணி கைவிடப்பட்டது. தொடர்ந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த நிலையில் இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்த கெளரியின் உடல் மீட்கப்பட்டது.

 

இச்சம்பவம்குறித்து சிறுமுகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply