சூலூர் இடைத்தேர்தல் 79.41. சதவிகிதம் வாக்குப்பதிவு ! இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள்,மாற்றுத்திறனாளிகள்,முதியோர் எளிதில் வாக்களிக்கும் வகையில் சாய்தளப்பாதைகளும்,சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டிருந்தன.மொத்தமுள்ள 324 வாக்குச்சாவடி மையங்களில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதலாக துணை ராணுவப்படையினர் பணியில் அமர்த்தப்பட்டனர்.மொத்தமுள்ள 324 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

வாக்குப்பதிவிற்கு முன்னர் காலை 6.30 மணியளவில் அரசியல் கட்சியினரின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

பின்னர்,காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவிற்காக அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

 

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட கருமத்தம் பட்டி புனித அன்னை உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி,எலச்சிபாளையம்,கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது முதற்கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பழுது காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

 

பின்னர்,காலை 9 மணி நிலவரப்படி 15,893 ஆண்,17,361 பெண் வாக்காளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.வாக்குப்பதிவு 11.26 சதவிகிதமாக இருந்தது.

மதியம் 1 மணி நிலவரப்படி 63,267 ஆண்,53,541 பெண் வாக்காளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.வாக்குப்பதிவு 39.57 சதவிகிதமாக இருந்தது.

 

காலை 3 மணி நிலவரப்படி 82,986 ஆண்,88,693 பெண்,2 மூன்றாம் பாலின வாக்காளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.வாக்குப்பதிவு 58.16 சதவிகிதமாக இருந்தது.

 

5 மணி நிலவரப்படி 98,608 ஆண்,99,683 பெண்,2 மூன்றாம் பாலின தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.வாக்குப்பதிவு 67.18 சதவிகிதமாக இருந்தது.

 

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி,எலச்சிபாளையம்,கண்ணம்பாளையம் உள்ளிட்ட 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதத்தின் காரணமாக இம்மூன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு மட்டும் வாக்குப்பதிவை ஒரு மணி நேரம் நீட்டித்து தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டதை அடுத்து வாக்குப்பதிவு முடிய கூடுதலாக நேரமாகும் என தெரிய வந்துள்ளது.

 

இறுதியாக சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.வாக்குப்பதிவு சதவிகிதம் 79.41.

 

வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் அரசியல் கட்சியினரின் முகவர்கள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு துணை ராணுவப்படையினரின் பாதுகாப்புடன் கோவையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசு தொழில் நுட்பக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.


Leave a Reply