எடப்பாடி தலைமையிலான அரசு 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பதே சாதனை தான் என்று, தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று, கணியூர், ராசிபாளையம், இருகூர், பட்டணம், பீடம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது 2 வருட சாதனை குறித்து பேசியபோது தன்னுடைய ஆட்சியில் போராட்டங்கள் அதிகம் நடைபெற்றதே சாதனை என்று கூறியுள்ளார். உண்மையை சொல்லப்போனால் எடப்பாடி ஆட்சி 2 ஆண்டு காலம் இருந்ததே மிகப்பெரிய சாதனை தான்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது, கூவத்தூரில் நடந்த கூத்து தெரியும். அவருக்கு பின், எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலை பிடித்து ஆட்சியை பிடித்தவர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கேபிள்கட்டணம் குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி, விசைத்தறி தொழில் பாதுகாக்கப்படும். இலவச மின்சாரத்தின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக நடன, நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை சிறுமி அபூர்வாவின், சினிமா பாடல்களுக்கேற்ப தலையில் கரகத்தை சுமந்தும், பாட்டில்கள் மீது நின்றும் நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்.