திருப்பூர் மண்ணரை போலீஸ் செக்போஸ்ட்டை ஒட்டி செயல்படும் சூதாட்ட விடுதியை போலீசார் கண்டு கொள்வதில்லை; அங்கு பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை போலீஸ் செக்போஸ்ட் அருகில் கிருஷ்ணசாமி கவுண்டர் புஷ்பாவதி அம்மாள் நினைவு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு, மண்ணரையை சேர்ந்த பெண் ஒருவரின் முகவரியில் இருந்து, அடுத்தடுத்த நாட்களில் இரண்டு கடிதங்கள் வந்தன.
அதில், ‘அருகில் உள்ள சூதாட்டவிடுதி, பார் மது விற்பனை குற்ற செயல்கள் அனைத்தும், அரசியல் பிரமுகர் முன்னிலையில், போலீஸ் அதிகாரிகளின் ஆசியோடு நடக்கிறது. தடுக்க வேண்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர், இதற்கு உடந்தையாக இருக்கிறார். எனவே, அரசு அலுவலகம் மற்றும் பள்ளி, குண்டு வைத்து தகர்க்கப்படும்,’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே பள்ளிக்கு, இதுபோல் நான்கு முறை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. ஆனால், மிரட்டல் விடுப்பவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட பள்ளிக்கு, மீண்டும் துணிச்சலாக மிரட்டல் வந்த நிலையில், சம்மந்தப்பட்ட நபர் யார் என்பதை கண்டறியாமல், ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் என்று கூறப்பட்ட நம் போலீசார் திணறுகின்றனர்.
அந்த கடிதத்தில், பொள்ளாச்சியில் நடந்தது போல் பாலியல் குற்றச்சம்பவம், அந்த கிளப்பில் நடக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவிகளை கடத்தி வந்து வீடியோ எடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விஷயத்தில் அலட்சியமாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. சூதாட்ட விடுதியில் என்ன நடக்கிறது; அதன் உரிமையாளர் யார்? அப்பாவி பெண்கள் சிக்கிக் கொண்டுள்ளனரா என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும். ஆனால், அவர்களோ, வாய்மூடி மவுனமாக உள்ளனர். வழக்கம் போல், மாமூல் வாங்கிக் கொண்டு போலீசார் சும்மா இருக்கிறார்களோ என்று, பொதுமக்கள் பேசும் நிலையே உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சில மாதங்களுக்கு முன் இதே போன்று வந்த கடிதத்தின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, சூதாட்ட விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஏதேனும் செயல்படுகிறதா? முறையான உரிமம் பெறப்பட்டுள்ளதா? அதன் உரிமையாளர் யார் என்று தீவிர விசாரணை நடக்கிறது’ என்று மழுப்பலான பதிலை தந்தனர்.
அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பிரதான ரோடாக உள்ள ஊத்துக்குளி ரோட்டில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. கிளப்பை ஒட்டியே போலீஸ் சோதனை சாவடியும் உள்ளது. 24 மணி நேரமும் அந்த சோதனை சாவடியில் போலீசார் உள்ளனர்.
இருப்பினும் இதையெல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. குறிப்பிட்ட சூதாட்ட கிளப்பில் விதிமீறல் உள்ளதா? பெண்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது பற்றிய தகவல்கள் இல்லை. போலீசார், விசாரணை மேற்கொண்டுவருவதாக வழக்கம் போல் பூசி மெழுகி பதில் கூறுகின்றனர். இது வேதனை அளிக்கிறது.
போலீசாரின் செயல்பாடுகளை பார்த்தால், கிளப்புக்கு அவர்கள் தான் பாதுகாப்பு தருவது போல் உள்ளது. எனவே குற்றவாளிகளுக்கு துணை நிற்காமல், இனியாவது சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளி யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்றார்.