குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தை! கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை ஏற்பாடு

சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில், குட்டிகளுடன் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு, வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சென்னாமலைக்கரடு வனப்பகுதியையொட்டி மோத்தேபாளையம் கிராமம் உள்ளது. இங்கு விவசாயம் முக்கியப்பங்கு வகித்து வருகின்றது.

 

சில மாதங்களாக சென்னாமலைக்கரடு வனப்பகுதியில் இருந்து குட்டிகளோடு சிறுத்தை ஒன்று, மோத்தேபாளையம் கிராமத்தைச் சுற்றியுள்ள தோட்டங்களில் நடமாடுவதை, ஒரு சிலர் பார்த்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் வெளியே நடமாட அச்சம் அடைந்துள்ளனர்.

 

கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் விவசாயமும், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. குட்டிகளுடன் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க சிறுமுகை வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டம் அறிய, வனத்துறையினர் தானியங்கி கேமராவை அமைத்து கண்காணித்தனர்.

 

இந்த நிலையில், மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் உத்திரவின் பேரில் சிறுமுகை வனச்சரகர் மனோகரன் மேற்பார்வையில், சிறுத்தையைப்பிடிக்க மோத்தேபாளையம் அருகே உள்ள அறிவொளி நகர் ஜம்பு என்பவரது தோட்டத்தில், கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

 

இதனால், விரைவில் சிறுத்தை கூண்டில் சிக்கும்; இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று அப்பகுதியினர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.-


Leave a Reply