கோவையில் 2 வீடுகளில் 53 சவரன் நகை திருட்டு! டாக்டர் வீடுகளுக்கு குறிவைத்து கைவரிசை

கோவையில், அடுத்தடுத்து உள்ள இரண்டு டாக்டர்களின் வீடுகளில் திருடர்கள் 53சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

 

கோவை, வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்; மருத்துவர். கடந்த 4ஆம் தேதி சென்னைக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு திரும்பினார். வீட்டைத் திறந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திருட்டு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 38 சவரன் தங்க நகைகள், 5 சவரன் வைர நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இதேபோல், கார்த்திகேயன் வீட்டிற்கு அடுத்துள்ள மருத்துவர் பழனிசாமி என்பவரும், கடந்த 30 ஆம் தேதி சென்னைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். அவரது வீட்டிலும் இதேபோல், 15 சவரன் தங்க நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது.

 

இருவரும் அளித்த புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து உள்ள இரண்டு மருத்துவர்கள் வீடுகளில் ஒரே மாதிரி திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது, அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply