நேற்று வெளியான சிபிஎஸ்இ தேர்வில், கோவை மாணவி காவ்யா வர்ஷினி சென்னை மண்டல அளவில் முதலிடம் பிடித்து, பெருமை சேர்த்துள்ளார்.
நாடு முழுவதும், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் வரை, 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெற்றன. நேற்று, தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில்,கேரளாவை சேர்ந்த மாணவி பாவனா சிவதாஸ், இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். அவர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இத்தேர்வில், இந்திய அளவில் சென்னை மண்டலம் இரண்டாமிடம் பிடித்தது. இதில், தமிழக அளவில் கோவை மாணவி காவ்யா வர்ஷினி, தேசிய அளவில் மூன்றாமிடமும், மண்டல அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர், 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இவருடன் 59 மாணவர்கள் தேசிய அளவில் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கோவை வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளியில் காவ்யா வர்ஷினி படித்து வந்தார். தனது சாதனை குறித்து காவ்யா வர்ஷினி கூறுகையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரின் உறுதுணையால் தான், அதிக மதிப்பெண்களை பெற முடிந்தது.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று எனது பெற்றோர் ஒருபோதும் வற்புறுத்தியது இல்லை; அடிப்படை கருத்துகளை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குவர். எனது பெற்றோர் அளித்த சுதந்திரத்தால் தான், எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்றார். மருத்துவர் ஆவது தனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து, கோவைக்கு பெருமை சேர்த்த காவ்யா வர்ஷினிக்கு, பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.