‘சரக்கு’ அடிக்க டம்ளர் திருடிய போலீஸ் பணியிட மாற்றம்! வேலியே பயிரை மேயலாமா?

மதுபானம் அருந்துவதற்கு தண்ணீர் பந்தலில் இருந்து டம்பர் திருடிய போலீஸ்காரர்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கீரமங்கலம் அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்டை பகுதியில், பள்ளிவாசல் அருகே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வைக்கப்பட்ட தண்ணீர் டம்ளர்கள் அடுத்தடுத்து மாயமாகி வந்தன.

 

இவ்வாறு, 20க்கும் மேற்பட்ட டம்ளர் திருடு போனதால், அங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இதில், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் வந்த கீரமங்கலம் காவலர்கள் இரண்டு பேர், தண்ணீர் டம்ளரை திருடிச் செல்லும் காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவானது.

 

இந்த தகவல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜின் காதுகளுக்கு எட்டியது. தண்ணீர் டம்ளரை திருடிய காவலர் ஐயப்பனை, ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து, அவர் உத்தரவிட்டார். இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற, ஊர்காவல் படை வீரர் வடிவழகனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

 

பொதுமக்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டிய போலீஸ்காரர்களே, லாபம் கருதாமல் சேவை நோக்கத்துடன் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் டம்ளர் திருடியது, பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது.


Leave a Reply