ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாய் பணம் பதுக்கல்! மார்ட்டின் வீட்டு சோதனையில் அதிகாரிகள் திகைப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Special Arrangements


லாட்டரி அதிபர் மார்ட்டினின் வெள்ளக்கிணறு வீட்டில், ரகசிய அறையில் கட்டுக்கட்டாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகளை பார்த்து அதிகாரிகளே திகைத்து போயினர்; அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கிறனர்.

 

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் சான்டியாகோவுக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்கள் என, தமிழகத்தின் கோவை, சென்னை மற்றும் மும்பை, டெல்லி, கொல்கத்தா நகரம் என சுமார் 70 இடங்களில், ஏப்ரல் 30ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். இது, இன்று முடிவுக்கு வந்தது.

 

லாட்டரி அதிபர் மார்ட்டின் சான்டியாகோ

 

கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற தொடர்ந்து சோதனைகளில், லாட்டரி வினியோகஸ்தர்களிடம் இருந்து கணக்கில் வராமல் 595 கோடி ரூபாய் பணத்தை பெற்றது தெரிந்தது. மேலும், 619 கோடி ரூபாய் ஆவணங்கள் மற்றும் 24 கோடியே 57 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளும் சிக்கியதாக கூறப்படுகிறது.

 

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மார்ட்டின் வீட்டில், ரகசிய அறை ஒன்று இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கு செல்வதற்கான படிக்கட்டுகள் மறைக்கப்பட்டு இருந்தன. அதைத் திறந்து படிகட்டில் ஏறிச் சென்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

வீட்டு அறையின் மேற்கூறை, மர படிக்கட்டுகளிலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. படுக்கைக்கு கீழே பதுக்கப்பட்டிருந்த ஆவணங்களும் சிக்கின. இதில், துணிப்பைகளில் திணித்து வைக்கப்பட்டிருந்த 2,000, 500, 200, 20 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். கட்டுக்கட்டாக பதுக்கப்பட்டிருந்த பணத்தை கண்டு அதிகாரிகளே வாயடைத்து போயினர். ஏற்கனவே கொல்கத்தாவில் வைத்து மார்ட்டினிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனி, வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு பிறகு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த அதிர்வலை ஓய்வதற்குள், அதிகளவில் கணக்கில் வராத பணம் சிக்கியிருப்பது, பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.