இமயமலையில் பனிமனிதன் ‘எட்டி’ நடமாட்டம்? விவாதத்தை கிளப்பிய இந்திய ராணுவ புகைப்படம்

இமயமலையில் கண்ட பெரிய கால் தடங்கள் ‘எட்டி’ என்ற பனி மனிதனுடையதாக இருக்கலாம் என்று கூறி இந்திய ராணுவம் வெளியிட்ட புகைப்படங்கள், அதுதொடர்பான அனல் பறக்கும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

 

மனிதனை போன்ற தோற்றம் உள்ள விலங்கினத்தை பனி மனிதன் (yeti) என்று கூறுவதுண்டு. பனிப்பிரதேசங்களில், எட்டி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இமயமலைக்காடுகளில் இவ்வகை பனி மனிதர்கள் வசித்து வருவதாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் பனி மனிதனை கடவுளாகவே நினைக்கின்றனர்.

 

எனினும், தற்காலத்தில் அவர்கள் வசிப்பது சாத்தியமில்லை. முந்தைய காலங்களில் அப்படி இருந்தவர்கள் காலநிலை சூழல் மாற்றத்தால் உயிரிழந்திருக்கலம் என்றும் ஒருசாரர் கூறிவருகின்றனர்.

 

பனி மனிதனின் கால் தடமாக இருக்கலாம் என்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள புகைப்படம்

எனினும் சில தினங்களுக்கு முன் இந்திய ராணுவம் வெளியிட்ட சில புகைப்படங்கள், இதுதொடர்பான விவாதங்கள் மீண்டும் கிளப்பி விட்டிருக்கிறது. “மாகலு – பருண் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கடந்த 9ஆம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்ட போது, 32 இன்ச் நீளம், 15 இன்ச் அகலம் கால்தடங்களை பார்த்துள்ளனர்.

 

பிரம்மாண்ட கால் அச்சு தெரிவது பனி மனிதனின் பாதமாக இருக்குமோ?

 

அவை அளவில் மிக பெரிதாக இருந்துள்ளன. அவற்றை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை எட்டியின் காலடித் தடங்கள் என்று அறிவித்து அண்மையில் டுவிட் ஒன்றை வெளியிட்டனர். அதில், கால்தட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். ஆனால், இந்திய ராணுவத்தின் தகவலை, நேபாள அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

 

நேபாள ராணுவ செய்தி தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே கூறுகையில், இந்திய ராணுவத்துடன் எங்களது தொடர்பு குழுவும் சென்றது. உண்மை என்னவென்பதை நாங்கள் அறிய முயற்சித்தோம். ஆனால், உள்ளூர்வாசிகள் அதை, காட்டுக்கரடியின் பாத தடங்கள் என்று திட்டவட்டமாக கூறுகின்றனர். எனவே, பனிமனிதனின் கால்தடமாக இருக்க வாய்ப்பில்லை என்றனர்.


Leave a Reply