பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய, சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுன்டரில் இன்ரு சுட்டு கொல்லப்பட்டார்.
அண்மை காலமாக, சேலம் நகரில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வந்தன. இதில் ஈடுபட்டு வந்த ரவுடிகளின் அட்டகாசம் பெருகியது. மது அருந்திவிட்டு வந்து அவர்கள் செய்யும் ரகளையால், மாநகர மக்கள் முகம் சுளித்தனர்.
இது குறித்து காவல் ஆணையருக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இதையடுத்து, மாநகர காவல் ஆணையார் சங்கர், அதிரடியாக சில நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 26 ஆம் தேதி, ஒரேநாளில் 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடி கதிர்வேலை தேடிவந்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் காரிபட்டியில், கதிர்வேல் பதுங்கியிருப்பது, போலீசாருக்கு தெரிய வந்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார், ரவுடி கதிர்வேலை சுற்றி வளைத்து சரணடையும் படி உத்தரவிட்டனர்.
ஆனால், இதற்கு சம்மதிக்காத ரவுடி கதிர்வேல் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது இரு தரப்புக்கும் நடைபெற்ற மோதலில், என்கவுன்டரில் கதிர்வேலை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது சேலம் மாநகர மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை தந்துள்ளது.