பெரம்பலூரில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் மீது பாலியல் புகார் கொடுத்து, விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வழக்கறிஞர் அருள், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூரில், அரசு வேலைவாய்ப்பு கேட்டு வந்த பெண்களை அங்குள்ள ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர், தனது உதவியாளருடன் சேர்ந்து பாலியல் வன் கொடுமை செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, மீண்டும் வரவழைத்து, லாட்ஜில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தை பெரம்பலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருள் என்பவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, அவர் மனு அளித்த பிறகே, இது பற்றிய விசாரணை தொடங்கியது. பெரம்பலூர் ஏடிஎஸ்பி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, ஆளுங்கட்சி வி.ஐ.பி. மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆதாரங்களை வெளியிடப் போவதாக, வழக்கறிஞர் அருள் கூறியிருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் பேசுவதாக கூறும் ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த சூழலில், வழக்கறிஞர் அருளை நேற்று மாலை பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இரவு வரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்த பிறகு, அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்வதாக கூறி அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக விளக்கம் கேட்கச் சென்ற சக வழக்கறிஞர்களையும், காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. அவர், ஜீப்பில் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் பொய் வழக்கில் தம்மை கைது செய்துள்ளதாக அருள் குற்றம்சாட்டியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தால் அதுபற்றி விசாரிக்காமல், புகார் கொடுத்தவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்துள்ள காவல்துறையினர் நடவடிக்கை, பெரம்பலூரில் உள்ள சமூக செயல்பாட்டாளர்கள், நடுநிலையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கை மூடி மறைக்கும் ஆளுங்கட்சியினரின் முயற்சிக்கு காவல்துறை உடந்தையாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக, அவர்கள் கூறுகின்றனர்.