சென்னை ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ஆட்டோ ஒன்றை ஓட்டிச் சென்று அசத்தினார்; இதனால் ஏற்பட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
அமைச்சர் ஜெயக்குமாரின் சொந்த தொகுதியான சென்னை ராயபுரத்தில், அதிமுக சார்பில் மே தின விழா கொண்டாட்டங்கள் நடந்தன. இதில் சிறப்பு விருந்தினராக, அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களும், கட்சி நிர்வாகிகளும் அமைச்சரை ஆட்டோ ஓட்டும்படி அன்புடன் நச்சரித்தனர். இந்த வேண்டுகோளை தட்ட முடியாமல், சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், அங்கிருந்த ஆட்டோ ஒன்றை எடுத்து சிறிது தூரம் ஓட்டிச் சென்று, தனது ஆதரவாளர்களை குஷிப்படுத்தினார்.
இது, அவரது ஆதரவாளர்களை சந்தோஷப்படுத்தினாலும், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது. வித்தியாசமாக ஏதாவது செய்து, ஆதரவாளர்களின் கரகோஷத்தை பெற்று வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். ஏற்கனவே, மேடைகளில் எம்.ஜி.ஆர். பாடலை பாடி, பலரின் கைத்தட்டல்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.