பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதல்வர், அதில் புகழாரம் சூட்டி ‘ஐஸ்’ வைத்திருப்பது, அவரை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று பேச்சு நிலவுகிறது.
இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் அஜீத் குமார், தப்பித்தவறி கூட அரசியல் பக்கம் திரும்பிப் பார்க்காதவர். எனினும், சில சூழ்நிலைகளில் அரசியல் பேச வேண்டிய கட்டாயத்திற்கு, கடந்த காலங்களில் அவர் தள்ளப்பட்டார்.
கடந்த 2000ஆம் ஆண்டில் அஜீத்- ஷாலினியின் திருமணமே, அரசியல் மேடை போல் இருந்தது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் நேரில் வாழ்த்தினர். எனினும், பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள், திரையுலக கலைநிகழ்ச்சிகளிள் அவர் பங்கேற்பதில்லை.
கடந்த 2010ஆம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு, ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ நடத்தப்பட்டது. அதில் பேசிய அஜீத், இதுபோன்ற விழாக்களில் எங்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி வரவழைக்கின்றனர் என்று, மேடையில் பகிரங்கமாக பேசினார். அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இந்த பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார்.
அதன் பின், அஜீத் ஒரு ஜெயலலிதாவின் விசுவாசி என்ற முத்திரை குத்தப்பட்டது. திமுக தலைவர் கொண்டிருந்த அதிருப்தியை சரிகட்ட, நடிகர் ரஜினிகாந்துடன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு சென்று, அவரிடம் அஜித் விளக்கத்தை அளித்தார்.
ஈழத்தமிழர்கள் பிரச்சனை, காவேரி பிரச்சனைக்காக திரைத்துறை சார்பாக நடைபெற்ற போராட்டங்களிலும் அஜீத் பங்கேற்கவில்லை. ஜெயலலிதா மரணத்தின் போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜித், அதை ரத்து மறுநாளே புறப்பட்டு சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இரவில் ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தபோதும், காவிரி மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினிடம் அஜீத் நேரில் நலம் விசாரித்தார்.
தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும், இதுவரை அரசியலில் ஆர்வம் காட்டாமல் அஜீத் ஒதுங்கி வந்தார். சில மாதங்களுக்கு முன் திருப்பூர் பாஜக கூட்டம் ஒன்றில் அஜீத் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக தகவல் வெளியானது. அந்த விழாவில் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், அஜித்தை பாராட்டினார்.
அடுத்த நாளே அஜித் வெளியிட்ட அறிக்கையில், தாம் எந்த கட்சியிலும் இல்லையென்றும் எந்தக் கட்சிக்கும் தனது ஆதரவு இல்லையெனவும் குறிப்பிட்டார். இப்படித்தான் நேற்று வரை, அஜீத்துக்கும் அரசியலுக்குமான தொடர்பு உள்ளது.
ரசிகர்கள் மன்றங்கள் வேண்டாமென்று கலைத்தார். அரசியலிலும் பட்டும் படாமல் இருந்து வருகிறார். ஆனாலும், திரை உலகில் அஜீத் முடிசூடா மன்னனாகவே திகழ்கிறார். ரசிகர் பலம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் தான், அவரை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில், சில அரசியல் புள்ளிகள் ஈடுபட்டு வருகின்றனர். அஜீத் தான் பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தான், அஜீத்திற்கு ஓவர் ஐஸ் வைப்பது போல், துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் டிவிட்டரில், பிறந்தநாள் வாழ்த்து என்ற பெயரில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அதில், எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைபெ ற்ற நடிகர் அஜித்குமார். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின் துடுப்பில்லாத ஓடம் போல் அதிமுக பயணித்து வருவதாக ஒரு கருத்து நிலவுகிறது. வசீகரமும், மக்கள் செல்வாக்கும் கொண்டவரை கட்சிக்குள் இழுத்து,அதை சரி கட்ட வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு உள்ளது.
எனவே, ஏற்கனவே அதிமுக பக்கம் சற்று நெருங்கி வந்த அஜீத்தின் தற்போதைய மன ஓட்டத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் தான் ஓ.பி.எஸ். முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.