தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ். முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு இந்த ஆண்டு வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
கடந்தாண்டு பல்வேறு குளறுபடிகள் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இங்குள்ள மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
பல ஆயிரம் கி.மீ. சென்று மொழி தெரியாத ஊரில் மன அழுத்தங்களுடன் மாணவர்கள் தேர்வு எழுத நேரிட்டது. அதேபோல், ஆடைகள் சோதனை போன்றவை கடும் கட்டுப்பாடுகள் பலரையும் அதிருப்தியடைய செய்தது.
இதையடுத்து, இம்முறை சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காதபடி பல்வேறு நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. அதன்படி, மாணவர்களை சோதனையிட தனித்தனி அறை ஏற்படுத்தப்படும் என்று, இது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆங்கில வழியில் தேர்வு எழுதும் சிலருக்கு மட்டும் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, அது தெரிவித்துள்ளது.
அதேபோல், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட பிழைகள் சரிசெய்யப்பட்டு விட்டது. பிழைகள் இருந்தால் மாணவர்கள் மே 3ஆம் தேதிக்குள் ஹால் டிக்கெட்டை சரி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.