போலீஸ் மிரட்டுவதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி..

கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அதே பகுதியில் தனது மனைவி சாந்தி, 16 வயது மகள் தரணியா, 18 வயது மகள் சிவகாம சுந்தரி ஆகிய இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். தனது வீட்டிலேயே ஆடு மற்றும் நாய் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அவர் அவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டிய காவல் துறை அதிகாரி ஒருவர் ஆடு மற்றும் நாய் வளர்ப்பினால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் சுகாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் கூறி செல்வராஜை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சம் அடைந்த செல்வராஜ் காவல்துறையில் புகார் அளித்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று எண்ணி இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது திடீரென தான் கொண்டு வந்திருந்த பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை பிள்ளைகள்,மனைவி மற்றும் தன்மீதும் ஊற்றி திடீரென தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டார்.

 

இதனை சற்றும் எதிர்பாராத ஆட்சியரகத்தில் நின்றிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் அவர் கையிலிருந்த தீப்பெட்டி மற்றும் பெட்ரோலை பிடுங்கி அவர்களை தடுத்து நிறுத்தியதோடு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை காப்பாற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து அங்கு வந்த பந்தய சாலை காவல் நிலைய போலீசார் 4 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டி வந்த காவல்துறை அதிகாரி செல்வராஜை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் காவல்துறை அதிகாரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவல்துறையினர் தன் மீது தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சத்தின் பேரிலேயே அவர் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். தற்போது தேர்தல் காலம் என்பதாலும் மனு நீதி நாள் நடைபெறுவதில்லை என்பதாலும் போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லை. அருகில் இருந்தவர்கள் தடுத்திருக்காவிட்டால் 4 பேரும் தீக்குளித்திருக்க வாய்ப்பு இருப்பதாக அலுவலகத்தில் இருந்தவர்கள் அச்சம் தெரிவித்தனர்.


Leave a Reply