தேர்தலில் போட்டியிட பொதுமக்களிடம் ” டொனேஷன் ” கேட்கும் சூலூர் வேட்பாளர்.

Publish by: --- Photo :


தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் காலியாக இருந்த 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் கடந்த மாதம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார்.உடனடியாக அரசிதழிலும் சூலூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் சூலூர் மற்றும் காலியாக உள்ள ஒட்டப்பிடாரம்,அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவித்தது.

வாக்கு சேகரிக்கும் வேட்பாளா் பிரபாகரன்
வாக்கு சேகரிக்கும் வேட்பாளா் பிரபாகரன்

இந்த நிலையில் அமமுக சார்பில் முன்னாள் எம்.பி சுகுமார்,திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி,அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சித்தப்பா மகன் வி.பி.கந்தசாமி ஆகியோரை வேட்பாளராக அறிவித்து அதற்கான தொகுதி பொறுப்பாளர்கள் மூலம் அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளனர்.

 

சூலூர் தொகுதியில் தற்போது பரபரப்பாக பேசக்கூடிய விஷயம் அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் பிரபாகரன் குறித்து தான்.அட அவரு அப்படி என்ன தான் செஞ்சாரு ? அப்படின்னு தான யோசிக்கறீங்க ?. விஷயம் இதுதான் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக டெல்லியில் போராடியது,சோமனூர் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி காவல் துறையின் அடக்குமுறையால் சிறைக்கு சென்றது,கோவை கணியூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இறுதியில் உள்ளூர் மக்கள் இலவசமாக இந்த சுங்கச்சாவடி வழியாக சென்று வர காரணமாக இருந்தது.மேலும்,மணல் கொள்ளை,அவினாசி-அத்திக்கடவு திட்டம் செயல்படுத்த உண்ணாவிரதம் இருந்து இறுதியில் வெற்றி பெற்றது உள்ளிட்ட காரணங்களால் தனக்கு வாக்களிக்க வேண்டும் எனவும்,தேர்தலில் போட்டியிட அடிப்படை செலவிற்காக ” டொனேஷன் ” வழங்கும் படி தனது வங்கி கணக்கு விபரங்கள் அடங்கிய நோட்டீசை அச்சடித்து பொதுமக்களிடம் வழங்கி ஆதரவு திரட்டி வருகிறார்.

 

 

முக்கிய அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்து எவ்வளவு செலவு செய்யலாம்,தெரியாமல் எவ்வளவு செய்யலாம்.ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என யோசித்து கணக்கு போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சுயேட்சை வேட்பாளர் பிரபாகரனின் இந்த நூதன பிரச்சாரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.