பெரம்பலூர் பாலியல் வழக்கில் அரசு மெத்தனம்! திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது தயவுதாட்சண்யமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

 

இது குறித்து மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

 

பொள்ளாச்சி விபரீதம் முடியும் முன்பே, பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார், பெரம்பலூர் மாவட்டத்திலும் வெளிவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற போர்வையில் பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை காட்டி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அதிமுக பிரமுகரின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவரங்களை ஆடியோ டேப் உரையாடல் ஆதாரத்துடன் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார்.

 

இந்தப் புகாரையும் கூட மூடி மறைக்கும் விதத்தில்தான் அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கிடவோ அல்லது பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்கிடவோ முன்வரவில்லை.

 

இளம்பெண்களின் வாழ்வு சூறையாடப்பட்ட ஒரு வழக்கினை இவ்வளவு மோசமாக ஒரு அரசு கையாண்டு, பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையோ, ஆர்வமோ காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு மவுனமாக வேடிக்கை பார்த்து வருவது இந்த ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு விபரீதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை உணர்த்துகிறது.

 

பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, இளம்பெண்களின் பாதுகாப்பைப் புறக்கணித்து – ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார். ஆகவே, பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து – அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்த காமக்கொடூரர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்ய வேண்டும்.

 

இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.


Leave a Reply