மே 1 ஆம் தேதி சூறாவளியை கிளப்ப காத்திருக்கும் முதல்வர் எடப்பாடி!

வரும் மே 19ஆம் தேதி நடைபெறும் நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 1ஆம் தேதி தொடங்குகிறார்.

 

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, அதன் இணை ஒருங்கிணைப்பாளரான, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார்.

 

அதன்படி, மே 1 ஆம் தேதி முதல் 14 வரை, சூறாவளி பிரசாரத்தை அவர் மேற்கொள்ள உள்ளார். சூலூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து, வரும் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஜல்லிப்பட்டியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

 

அரவக்குறிச்சி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்கும்; திருப்பரங்குன்றம் வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து 6 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் விரகனூரிலும் பிரசாரம் தொடங்குகிறார்.

 

ஓட்டப்பிடாரம் வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து 7 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை தொடங்கும் முதல்வர், திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து 11 இல் நாகமலை புதுக்கோட்டை பிரசாரத்தை ஆரம்பிக்கிறார்.

 

இந்த நான்கு தொகுதிகளிலும், மீண்டும் இரண்டாம் கட்ட பிரசாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்கிறார்.


Leave a Reply