இனி ஆடலாம்… பாடலாம்… கொண்டாடலாம்! டிக்- டாக் செயலி மீதான தடை நீக்கம்

இந்தியாவில், டிக் -டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை, நிபந்தனைகளுடன் நீக்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

சீனாவை சேர்ந்த ‘டிக்-டாக்’ என்ற செயலி, இந்தியாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது. எனினும், இந்த செயலி, ஆபாச செயல்களை தூண்டுவதாகவும், பலரின் தற்கொலைக்கு காரணமாக உள்ளதாகவும் கூறி, அதற்கு தடை கேட்டு, மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

 

இதையடுத்து, டிக்-டாக் செயலிக்கு தடை விதித்த நீதிமன்றம், அந்த செயலி மூலம் எடுத்த வீடியோக்களை ஒளிபரப்பரக்கூடாது எனவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், டிக்-டாக் செயலி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் ஏப்ரல் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

 

இதையடுத்து, இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு நேற்று மீண்ட்ம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சில நிபந்தனைகளுடன் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

 

அதன்படி, சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


Leave a Reply