‘குற்றம் குற்றமே’ எக்ஸ்குளூசிவ் பாலோ- அப்! அதிமுக வேட்பாளருக்கு எதிராக கலெக்டரிம் புகார்

Publish by: நமது புலனாய்வு நிருபர் --- Photo : குற்றம் குற்றமே இதழ்


திருப்பூரில், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விதிகளை மீறியதாக, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில், தேர்தல் அதிகாரியான, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. திருப்பூரில் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முருங்கப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

 

அப்போது, அனுமதியின்றி அவரது ஆதரவாளர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தனர். அத்துடன் வாக்களித்த பிறகு, இரட்டை இலை சின்னத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆனந்தன் தனது கைவிரலை காட்டினார். இது, தேர்தல் விதிமீறல் என்று கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பூத் ஏஜென்ட் சக்திவேல் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. இதுகுறித்த செய்தி, நமது “குற்றம் குற்றமே” இணையதளத்தில் படங்களுடன் வெளியிடப்பட்டது.

 

இது விதிமீறல் தானே?: விதிகளுக்கு புறம்பாக வாக்கு மையத்திற்குள் ஆனந்தனுடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள்.

இந்த நிலையில், விதிமீறியதாக கூறி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில், தேர்தல் அதிகாரியான, மாவட்ட ஆட்சியரிடம், பூத் ஏஜெண்டாக இருந்த சக்திவேல் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 

கடந்த 18ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது, திருப்பூர் தொகுதிஇ ந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனின் வாக்குச்சாவடி முகவராக, தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முருங்கப்பாளையத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பணியாற்றினேன்.

 

அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டார். அதிகளவில் ஆட்களை தன்னுடன் அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் மற்றும் இரட்டை இலை சின்னம் பொறித்த பேட்ஜூகளை சட்டை பையில் அணிந்திருந்தனர்.

 

இது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனந்தன் வாக்களித்து விட்டு, வாக்குப்பெட்டியின் முன் நின்றபடி இரட்டை இலை சின்னத்தை வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தும் கைவிரலை உயர்த்தி காட்டினார். அதை தட்டிக்கேட்டதால், அவருடன் வந்தவர்கள் தாக்கினர். தரக்குறைவாக பேசி, எனக்கு மிரட்டல் விடுத்தனர்.

 

எனவே தேர்தல் விதிமுறைகளை மீறிய அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் மீதும், தரக்குறைவாக பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.