விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு! நாசவேலை சதி தொடர்பான 8 பேர் கைது

இலங்கை தலைநகர் கொழும்புவில், விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. சதி, நாச வேலை தொடர்பாக, இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஈஸ்டர் பண்டிகை தினமான நேற்று இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த அதிர்ச்சிகர சம்பவத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, டென்மார்க், ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேச நாட்டவர்களும் அடங்குவர்.

 

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இச்சம்பவத்தில்,ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

 

 

தொடர் குண்டுவெடிப்பை அடுத்து இலங்கையில் கல்வி நிறுவனங்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கலவர தடுப்பு போலீசார், சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

 

இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தாக்குதல் தொடர்பாக, சந்தேகப்படும் படியான உள்ளூர்வாசிகள் 8 பேரை இலங்கை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் வெளிநாட்டு சதி உள்ளதா என விசாரணை நடக்கிறது.

 

இதனிடையே, கொழும்பு விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வெடிக்கும் முன்பே அது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Leave a Reply