மிரட்டுகிறதா காஞ்சனா -3 திரைப்படம்? குட்டீஸ்களுக்கும் குதூகலம் தருமா?

கோடை விடுமுறையில் குழந்தைகளை குறிவைத்து, வெளிவந்திருக்கிறது, சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள, காஞ்சனா – 3 திரைப்படம்.

 

தாத்தாவின் 60ஆம் கல்யாணத்திற்கு கோவைக்கு செல்லும் ராகவா லாரன்ஸ், வழியில் ஓரிடத்தில் சாப்பிடுகிறார். அந்த இடத்தில் இருந்த ஒரு ஆணியை பிடுங்கி அவர் எறிய, அதில் இருந்த பேய், ராகவா உடலில் புகுந்துவிடுகிறது.

 

அதன் பின் நடக்கும் சம்பவங்களை, காமெடி மற்றும் சுவாரஸ்யமாக, திரில்லராக கொண்டு செல்கின்றனர். முந்தைய படங்களை போலவே இதிலும் பிளாஸ் பேக் செண்டிமெண்ட் இடம்பெற்றுள்ளது. இறுதியில் பேய் எப்படி விரட்டப்படுகிறது; ராகவா லாரன்ஸ் என்னவாகிறார் என்பதே கதை.

 

இப்படத்தில் வேதிகா, ஓவியா மற்றும் புதுமுகம் நிக்கி டம்போலி என மூன்று கதாநாயகிகள். அவர்களுடன் ராகவா பகலில் ஆட்டம் போடுகிறார்; இரவில் பேய் அவரை ஆட்டுவிக்கிறது. இக்காட்சிகள் குழந்தைகளை நடுக்கவும், சிரிக்கவும் வைப்பதாக உள்ளது. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது; இரண்டாம் பாதி கொஞ்சம் டல்; நீளத்தையும் குறைத்திருக்கலாம்.

 

குழந்தைகள் விரும்பி பார்க்கிறார்கள் என்பது ராகவா லாரன்ஸுக்கு தெரியும். எனவே, பெண்களை பிகர் என்று அழைப்பது, கவர்ச்சி அம்சங்களை குறைத்து கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

 

பின்னணி இசையும், கோவைசரளா, தேவதர்ஷிணி, ஸ்ரீமன் ஆகியோர் படத்திற்கு மற்றுமொரு பிளஸ் பாயிண்ட். நகைச்சுவையுடன் பேய் கதைகள் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரையும் குஷிப்படுத்தும் என்ற ரசிகர்களின் பல்ஸ் அறிந்து இந்த படத்தை எடுத்து, நேரம் பார்த்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படத்தில் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக ஒன்றும் இல்லையென்றாலும், டைம் பாஸுக்கு இது ஓகே.


Leave a Reply