இன்றுடன் நிறைவு பெறுகிறது தேர்தல் பிரசாரம்! ஓட்டு வேட்டையில் தலைவர்கள் தீவிரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது.

 

இதன் காரணமாக, அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது அணிக்காக இறுதிக்கட்ட பிரசாரத்தை இன்று காலையிலேயே துவக்கி, வாக்கு சேகரித்து வருகின்றனர். கட்சிகளின் வேட்பாளர்களும் வெயிலை பொருட்படுத்தாமல், வீதிவீதியாக, வீடுகள் தோறும் சென்று ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தன்னுடைய பிரசாரத்தை நிறைவு செய்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை செய்து வருகிறார்.

 

திமுக தலைவர் ஸ்டாலின், மார்ச் மாதம் 20 ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்; இன்று அங்கேயே பிரசாரத்தை நிறைவு செய்கிறார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி போட்டியிடும் தர்மபுரியில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஈரோட்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகப்பட்டினத்திலும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையிலும் பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர்.


Leave a Reply