விவசாயம் பற்றி பேசாமல் வீரதீரம் பற்றி பேசுவதா? பிரசாரத்தில் மோடிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

நாடாளுமன்ற தேர்தலில் விவசாய பிரச்சனைகளை பற்றி மோடி பேசாமல், வீர தீரங்களை பற்றி தான் பேசுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பிரசாரத்தின் போது பேசினார்.

 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து, ஊத்துக்குளி, ராக்கியாபாளையம் பிரிவு, வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கே.தங்கவேல் பேசியதாவது:

 

தற்போதைய தேர்தல் மிக முக்கியமானது. மோடி மீண்டும் வெற்றி பெற்றால் இனிமேல் தேர்தலே நடக்காது. இதுதான் கடைசி தேர்தலாகிவிடும். பாஜக  பாசிச தன்மை கொண்ட கட்சி.

 

கடந்த தேர்தலில் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. விவசாய விளைபொருள் விலை ஒன்றரை மடங்கு தருவோம்; ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்ற வாக்குறுதிகள் என்ன ஆனது?

 

ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்ததற்காக பட்டாசு வெடித்து, இனிப்பு கொடுத்து கொண்டாடிய கட்சி பாஜக. ஆனால் கோவை வந்த மோடி இப்போது ஜிஎஸ்டி வரியை குறைப்போம் என்கிறார்.

 

இப்போது ஒரே ஓட்டில் மத்திய அரசையும், மாநில அரசையும் தோற்கடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

மக்களின் அடிப்படையான தொழில், விவசாயம், கல்வி பற்றி விவாதிப்பதை விட்டு பாகிஸ்தான் பற்றியும், தனிப்பட்ட வீரதீரம் பற்றியும் மோடி பேசி திசை திருப்பி வருகிறார்.

 

இளந்தலைமுறையினர் போடும் முதல் ஓட்டு முக்கியமானது. முதல் ஓட்டு கடைசியாக போடும் ஓட்டாக இல்லாமல் இருக்க,  மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று பேசினார்.

 

இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக, விசிக, முஸ்லிம் லீக் கட்சி ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply