மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் முடிய சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இன்று தமிழகம் வருகின்றனர்.
அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நாளை காலை 11 மணியளவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
நாளை மதியம் 2 மணியளவில் தேனி எஸ்.எஸ்.புரம் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்று பேசுகிறார். இதற்காக இன்றிரவே மோடி மதுரைக்கு வந்து அங்கு தங்குகிறார்.
இதேபோல் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இன்று காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி, நாமக்கல் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மதியம் 1 மணியளவில் சேலம், 3 மணி தேனியிலும், மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றத்திலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
தேர்தல் பிரசாரத்திற்காக, எதிரெதிர் துருவங்களாக உள்ள மோடியும் ராகுலும் ஒரே நாளில் மதுரைக்கு வருவது முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.