கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு – குடிநீர் வழங்குவதில் சிக்கல்

கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு – குடிநீர் வழங்குவதில் சிக்கல்

கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக அத்திக்கடவு மற்றும் பில்லூர் அணை விளங்கி வருகிறது. இப்பகுதிகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு ராட்சத பைப்கள் மூலம் வெள்ளியங்காடு, தாயனூர், வீரபாண்டி, பெரியநாயக்கன் பாளையம், துடியலூர் வழியாக கோவையிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் காரணமாக தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு போய் உள்ள நிலையில் கோவை மக்களுக்கு அத்திக்கடவு மற்றும் பில்லூர் அணை நீர் குடிநீர் தேவைக்காக கை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இப்பகுதி வழியாக துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு அருகே கோவைக்கு கொண்டு செல்லப்படும் குடிநீர் மெயின் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக கழிவு நீர் குட்டையில் கலந்து வீணாகி வருகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 மணி நேரமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோவைக்கு கொண்டு செல்லப்படும் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மெத்தனப்போக்கை கைவிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் மெத்தனப்போக்கு பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply