தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரை பார்த்து கும்பிடு போட்டு, வாக்கு சேகரித்ததாக, மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல் துறையினர் ஈடுபடுகின்றனர். இவர்கள் முன்கூட்டியே தபால் வாக்குகளை பதிவு செய்வது வழக்கம். அதன்படி, மதுரையில் உள்ள அரசு ஊழியர்கள், காவல் துறையினர், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி நேற்று தபால் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்த போது, அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் அங்கு வந்துள்ளார். அத்துடன், கும்பிடு போட்டு தமக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, அங்கிருந்தவர்களை பார்த்து கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம், அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக, எதிர்த்தரப்பினர் புகார் செய்தனர்.
இந்நிலையில் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது மதுரை செல்லூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துமோ என்று கட்சியினர் கவலை அடைந்துள்ளனர்.